Friday, 30 June 2017


நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள். 

குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை.

குலதெய்வ
 
படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று  சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. காரணம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்ட இன்றைய சூழலில், குலதெய்வம் பற்றிய விவரங்களைக் குடும்பப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை. 

குலதெய்வமே என்னவென்று தெரியாதவர்கள் எப்படி தங்களுடைய குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு வழிபடுவது என்பதுபற்றி தொகுப்பு இதோ...  
''மனிதன் தீராத பிரச்னைகளால் மனக்கவலை வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்பப் பெரியவர்களைக் கேட்கிறான்.
 சிலர்  தங்களது குடும்ப வழக்கப்படி கோடங்கி பார்ப்பவரை அழைத்து உடுக்கடித்து தெய்வத்திடம் குறி கேட்பார்கள். சிலர் ஜாதகத்தை, குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர், 'உங்கள் பூர்வீக குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள், எல்லாம் சரியாகும்' என்பார்.  
சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.
சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட  அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா?  நிச்சயமாக முடியும்.
ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும்.  5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம். 
இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா,  நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம்  இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். 
நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின்  ஜாதகத்தில் இருந்து  கண்டுபிடிக்கலாம். 
ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். அதாவது ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 
சிலர் கேட்கலாம்...  
எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கேட்டால், அதைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம். 
நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய  துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி,  “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத்தெரியவரும்.இன்னொரு முறையும் இருக்கிறது. 
உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒருகுடும்பத்துக்கு வரும்.
 அதாவது 
ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். 
அது பெருமாளாக இருக்கலாம்,சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். 

அடுத்து குலதெய்வம். 

பிறகு காவல் தெய்வமாக    ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். 
மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார்,  மதுரை வீரன், காத்தவராயன் , ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர்.  இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்.                                                                                    சுபம்

Tuesday, 27 June 2017

பஞ்சபுராணம்பாடுதல்

ஓம் சிவ சிவ ஓம் 


*பஞ்சபுராணம்பாடுதல் என்ற வழக்கம்* 


*முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது.*


தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. 


சமயக் குரவர்கள்,

திருமூலர்,

சேக்கிழார்,

திருமாளிகைத்தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. 


அவற்றில் . . .

 *தேவாரம் (7 திருமுறைகள்),*


*திருவாசகம் (திருக்கோவையார்),*


*திருவிசைப்பா,* 


*திருப்பல்லாண்டு,* 


*திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)*


ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. 


*இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.*


சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. 


பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். 


பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.


சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.


அவர்கள் முடித்த பிறகு தமிழ் வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்சபுராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.


மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

*விநாயகர் வணக்கம்*


"ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்*


"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் 

காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்*


"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் 

பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி 

உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 

எங்கு எழுந்தருளுவது இனியே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*சேந்தனார் அருளிய திருவிசைப்பா*


"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்

திருவீழிமிழலை வீற்றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்

குளிரஎன் கண் குளிர்ந்தனவே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு*


"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*சேக்கிழார் அருளிய பெரியபுராணம்*


"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்*


"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே

ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்*


"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*திருஞானசம்பந்தர் அருளியது தேவாரம்*


"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி! போற்றி!


                 *திருச்சிற்றம்பலம்*

வில்வம்

வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்

அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்

சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்

ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு

மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்



வில்வ வழிபாடும் பயன்களும்

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்


வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது

நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.

வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.

Monday, 26 June 2017

*இப்படியும் பூஜிக்கலாம் !! எப்படி பூஜிக்கிறோம் என்று நீங்கள் அறிவிர்கள் !! ( இப்படித்தான் பூஜிக்கவேண்டும் என்று உங்களுக்கு வலியுறுத்த முடியாது !! உங்களுக்கான தனிதன்மை ஒவ்வொவருக்கும் உண்டு என்பதே மெய் !! இப்படியும் பூஜிக்கலாம் என்ற உற்றவன் உணர்த்தலே பதிவாக )*

நமச்சிவாய
நமது எண்ணம் என்று கருதுவதை கொண்டே நாம் செய்யும் பூஜையும் அதன் வெளிப்பாடான செயல்களும் அமையும் !! அந்த எண்ணத்தை இறைவனோடு ஒன்றி நாம் பூஜிக்கும் செயல்களில் பதிந்து !! நம் எண்ணமும் செயலும் சிவத்தோடு ஒன்றி செய்யும்போது நமது சிந்தை சிதறாமல் இறையோடு கலந்த நிலையில் பிரதிபலிக்கும் !! நாமும் தெளிவுற வேண்டிய யாவும் நாம் சிந்தையுள் நிறையும் !! சிவமே நாம் சிந்தையை ஆளும் !! அங்கனம் செய்ய நாம் செய்யும் பூஜை வான் மண்டலத்தில் இறையோடு நமது எண்ணத்தையும் எண்ணத்தின் வேண்டலை கலக்கசெய்து !! யாருமூலம் எங்கனம் எப்படி எதன்வழியே வெளிப்பட வேண்டுமோ அங்கனம் வெளிப்படும் !!

*இறைவனை பூஜிக்க தொடங்கும்போது *: இறைவா ஏதோ என்னுள் உன்னால் விளைந்த அறிவாலே உன்னை பூஜித்து என்னை சீர்படுத்தவே முயல்கிறேன் எதற்கும் துணை நிற்கும் நின் மாபெரும் கருணை இதற்கும் முன்னிற்று துணைபுரிய வேண்டும் !! என்ற சங்கல்பம் செய்துகொண்டு பூஜிக்க தொடங்குங்கள் !!

*விளக்கு ஏற்றும்போது* : ஜோதிவடிவான பரம்பொருளே !! என்னையே எண்ணெய் யாக்கி !! என் வினையையே திரியாக்கி !! அதில் சுடராக உன்னையே ஏற்றுகிறேன் !! என்னுள் எது ஒளிவிட வேண்டுமோ அதை ஒளிரசெய்து !! என்னுள் என்ன எரிந்து அழியாவேண்டுமோ அதை எரித்து அழித்து !! என்னையும் நின்னால் மிளிரசெய்யவே இந்த விளக்கை ஏற்றுகிறேன் என்று உங்கள் எண்ணத்தை செய்யும் செயலில் பதிந்து விளக்கை ஏற்றுங்கள் !!
*அபிஷேகம் செய்யும்போது* : நின் திருவருளால் நின் தன்மையாக எனக்கு நீ அருளிய இந்த திருமேனியில் என் ஆன்மாவை அதனுள் நிறுத்தி அபிஷேகம் செய்கிறேன் !! என் ஆன்மா மாயையில் சூழ்ந்து !! மலங்கள் சூழ்ந்தும் !! இருக்கிறது !! அதை உன்னுள் நிறுத்தி அபிஷேகம் செய்யும்போது அதிலிருந்து விலகவேண்டியத்தை விலகசெய்து !! மெய்யாகி நீயே என்னுள் இருந்து !! நான் உணரும்வண்ணம் வெளிபடவேண்டும் என்று எண்ணத்தை அத்திருமேனியுள் நிறுத்தி அவனோடு நீங்கள் என்று அனுபவித்து செய்யுங்கள் !!

*மலர் இடும்போது* : அந்த மலரை தங்கள் கையில் வைத்து !! இறைவா என்னுள் மலரவேண்டியது எத்தனையோ உள்ளது !! அது எப்போது எப்படி மலரவேண்டும் என்று அறிந்தவன் நீயே !! நான் மலர்ந்ததாக கருதுவதில் கூட மலாரது நிறைய உண்டு !! நானே மலர்ந்துவிட்டேன் என்ற அகந்தையால் மலர்விடாது இருக்கிறேன் !! அதையாவும் மலரவைப்பவன் நீயே !! மலர செய் !! மணக்கவும் செய் !! என்ற எண்ணத்தை பதிந்து மலரை சூட்டுங்கள் !!

*தூபம் காட்டும்போது* : பெருமானே என்னுள் எது எதுவோ மணக்கிறது ?! எது மணக்கவேண்டுமோ அதை அறிந்து மணக்கசெய்கிறவன் நீயே !! ஆதலால் என்னுள் எது மணந்தாலும் வெளிபட்டாலும் உன்னால் !! நீயே காரணம் என்ற எண்ணமே என் சிந்தையாளவேண்டும் என்று தூபம் காட்டுங்கள் !!

*திருமுறை பாடும்போது* : பெருமானே நீயே நின் அடியார்கள் சிந்தையுள் நின்று !! நீயே சொல்லாய் வார்த்தையை உணர்வாய் வெளிப்பட்ட திருமுறையை எனக்கு நீ அளித்த அறிவுகொண்டு !! நீ எனக்கு அறிவுறுத்திய விதம் பாடுகிறேன் ? படிக்கிறேன் ? அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் அனுபவித்த திருவருள் துளியை எனக்கும் கொஞ்சமாவது உணருமாறு உணர்த்தியாளு சிவமே !! என்று எண்ணத்தை சிவத்தின் மீது நிறுத்தி பாடுங்கள் !!

*நெய்வேத்தியம் படைக்கும்போது* : இறைவா நீ அளித்த இந்த உடலுக்கு என்ன தேவை ! எப்போது தேவை ! எப்படி தேவை !! என்று நான் என்று கருதும் ? எனக்கு முன்னே நீ அறிந்து அருளிகொண்டே இருக்கிறாய் !! நானும் நின்னை உணராதே அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன் !! உன்மூலமே கிட்டியது உன்னால் என்று உணர்ந்தே உனக்கே சமர்பிக்கிறேன் அதில் நான் என்ற ஆணவத்தையும் சேர்த்தே சமர்பிக்கிறேன் !! ஏற்றுக்கொண்டு எதிலும் நின்னை மறவாதிருக்க அருள்வாய் என்று படைத்தவனுக்கு படையுங்கள் உங்கள் அன்பையும் கலந்து !!

*தீபாராதனை காட்டும்போது* : திருவின் உருவாக எதையோ எத்தனையோ கண்டாலும் கொண்டாலும் !! என்னுள் சுடர்விடும் ஜோதியாய் நீயே இருக்கிறாய் !! நின் வெளிப்பாட்டை அகமாக ! புறமாக !! எப்போதும் ! எங்கும் உணர்வே !! உணர்வில் உணர்விப்பத்தையும் உணரவே !! சுடர்விடும் ஜோதியாய் உன்னை வணங்கி !! என்னுள் நிறுத்துகிறேன் !! என்று  தீபாராதனை காட்டுங்கள் !!


இப்படித்தான் இதுதான் என்று சொல்ல ஏதுமில்லாதவன் தயவால் என்னுள் அவனாலே விளைந்ததை பதிந்துள்ளேன் !!

உங்களுள் வெளிப்படும்படியே அவன் மிளிர்வான் !!

பூஜித்து பாருங்கள் !!

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

Sunday, 25 June 2017


ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது அனைவருக்கும் அறிந்தது, அவை என்ன என்ன கலைகள் என்று அறிந்தோர் வெகு சிலர் என்றே கூறலாம். இன்றைய நவீன உலகத்தில் அனுதினமும் ஆச்சரிய படும் வகையில் அறிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டேயிருக்கிறது, விண்ணை கடந்து செல்லும் நுட்ப வளர்ச்சியும் பெற்றுள்ளோம்.

ஆனால் இத்தகைய நவீன தொழில்நுட்பம், அறிவியல் கருவிகள் இல்லாத அக்காலத்தில் நமது முன்னோர்கள் அறிய பல விடங்களை தமது அனுபவத்தால் உணர்ந்து இவ்வுலகிற்கு அளித்துள்ளனர்.

அவற்றில் ஆய கலைகள் அறுபத்தி நான்கின் வகைகள்

” ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாரா திடர்.

என கம்பர் சரசுவதி அந்தாதி என்ற நூலில் கவி இயற்றியுள்ளார்.

ஆயகலை-64
எழுத்து இயல் கலை –[அட்சர இலக்கணம்] விகித கலை –[எழுத்து ஞானம்] கணித நூல் –[எண் கணிதம்] வேதம் –[முதல் நூல்] புராணம் –[பூர்வ கதை இதிகாசம்] வியாகரணம் –[இலக்கண நூல்] ஜோதிட சாஸ்திரம் –[வான நூல்] தர்ம சாஸ்திரம் –[தர்ம நூல்] நீதி சாஸ்திரம் –[நீதி நூல்] யோக சாஸ்திரம் –[யோக பயிற்சி நூல்] மந்திர சாஸ்திரம் –[மந்திர நூல்] சகுன சாஸ்திரம் –[நிமித நூல்] சிற்ப சாஸ்திரம் –[சிற்ப கலை] வைத்திய சாஸ்திரம் –[மருத்துவம்] உருவ சாஸ்திரம் –[உடல் கூறு இலட்சணம்] சப்த பிரம்மம் –[ஒலி குறி நூல்] காவியம் –[காபியம்-நாவல்] அலங்காரம் –[அணி இலக்கணம்] மதுர பாசனம் –[சொல் வன்மை] நாடகம் –[கூத்து நூல்] நிருத்தம் –[நடன நூல்] வீனை –[மதுர கான நூல்] வேணுகானம் –[புல்லாங்குழல் இசை] மிருந்தங்கம் –[மத்தள சாஸ்திரம்] தாளம் –[இசை நூல்] அஸ்திரபயிற்சி –[வில் வித்தை] இரச் பரிட்சை -[அதிரச சாஸ்திரம்] கனக பரிட்சை –[பொன் மாற்று காணும் நூல்] கஜ பரிட்சை –[யானை தேர்வு நூல்] அஸ்வ பரிட்சை –[குதிரை தேர்வு நூல்] இரத்தன பர்ட்சை –[நவரத்தின தேர்வு] பூமி பரிட்சை –[மண் அளவு தேர்வு] சங்கிராம இலக்கணம் –[போர் முறை] மல்யுத்தம் –[மற்போர் கலை] ஆகர் சனம் –[அழைத்தல்] உச்சாடனம் –[உச்சரித்தல்-அகற்றுதல்] வித்வேசனம் –[பகை மூட்டல்] மதன சாஸ்திரம் –[கொக்கோயிசம்] மோகனம் –[மயங்குதல்] வசிகீரம் –[வசிய படுத்தல்] ரச வாதம் –[பிற உலோகங்கலை தங்கமாக மாற்றுதல்] காந்தருவ வாதம் –[காந்தருவகலை பற்றிய விசயம்] பைபீலவாதம் –[மிருகங்கள் பாஷையில் பேசுதல்] கவுத்து வாதம் –[துயரத்தை இன்பமாக மாற்றும் கலை] தாது வாதம் –[நாடி நூல்] காருடம் –[மந்திரத்தால் விஷம் அகற்றுதல்] நஷ்ட பிரசனம் –[ஜோதிடத்தால் இழப்பை கூறுதல்] முட்டி சாஸ்திரம் –[ஜோதிடத்தால் மரைந்ததை கூறுதல்] ஆகாய பிரவேசம் –[வானில் பறத்தல்] ஆகாய கமனம் –[வானில் மறைந்து உலவுதல்] பரகாய பிரவேசம் –[கூடு விட்டு கூடு பாய்தல்] அதிருசியம் –[தன்னை மறைத்து கொள்ளுதல்] இந்திர ஜாலம் –[ஜால வித்தை] மகேந்திர ஜாலம் –[அதிசயம் காட்டுதல்] அக்னிஸ்தம்பனம் –[நெருப்பை காட்டுதல்] ஜல ஸ்தம்பனம் –[நீர் மேல் நடத்தல்] வாயு ஸ்தம்பனம் –[காற்று பிடித்தல்] திருஷ்டி ஸ்தம்பனம் –[கண் கட்டுதல்] வாக்கு ஸ்தம்பனம் –[வாயை கட்டுதல்] சுக்கில ஸ்தம்பனம் –[இந்திரிகத்தை கட்டுபடுத்துதல்] கன்ன ஸ்தம்பனம் –[மறைந்து உழவுதல்] கட்க ஸ்தம்பனம் –[வாள் சுழற்றுதல்] அவஸ்தை பிரயோகம் –[ஆன்மாவை கட்டுபடுத்துதல்] கீதம் –[இசை நூல்]
பழைய கோவிலின் தோற்றம்





குலதெய்வத்தை எப்படி வழிபட்டால் செல்வம் கொழிக்கும்







குறிப்பு : இந்த தளத்தில் பதியப்படும் பதிவுகள் பல்வேறு சமூக வலைத்தளங்கள் , திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகள், விவரிப்புகள் ,ஈமெயில் மூலமாகவும் இணையம் வலைதளங்களின் மூலமாகவும் பெறப்பட்டது . அனைத்து தகவல்களையும் எனது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே எனது இந்த பயணம் துவங்கியது! ஆனால் இந்த வலை தளம் மூலம் கிடைத்த வரவேற்பு என்னை மேலும் உற்ச்சாகப் படுத்தியுள்ளது. என்னுடைய இந்த சிறிய சிறகுகளின் மூலம் என்னால் முடிந்ததை உங்களிடம் கொண்டு வந்து சேர்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்! தகவல்கள் பெறுவதற்கு உதவியாக இருந்த அனைத்து வலைதளங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் இந்த வலைதளத்தின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் ! இமெயிலில் வரும் பதிவுகளை பதிவிடும் போது,அந்த பதிவு எந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிய வாய்ப்பு இல்லாததால் தளத்தின் பெயரையோ ,வலைதளத்தின் இணைப்பையோ அல்லது கட்டுரையாளர் பெயரையோ பதிவில் என்னால் குறிப்பிட முடியவில்லை. தங்களின் பதிவுகளை இங்கு பகிர்வதால் தங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் சம்மந்தப்பட்ட வலைதள உரிமையாளர்கள் எனக்கு தெரிவியுங்கள் நான் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிடுகிறேன் . மேலும் இந்த தளத்தில் உள்ளவைகளை பற்றி என்னிடம் vrrshankar80@gmail.com என்ற முகவரியில் நட்புறவுடன் விவாதிக்கலாம்! நன்றி!




https://youtu.be/Ba0tCFF24VI